திருவண்ணாமலை திருவூடல் விழா... தம்பதி சகிதமாக தரிசனம் செய்தால் ஒற்றுமை ஓங்கும்

ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் கிரிவலம் வருவது உண்டு.;

Update:2024-01-10 13:37 IST

குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் கணவன்-மனைவிக்குள் ஊடலும், கூடலும் தவிர்க்க முடியாதவை. திருவண்ணாமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கூட இத்தகைய ஊடலை நடத்தி இருக்கிறார்கள். இதனை 'திருவூடல் விழா' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறார்கள். தை மாதம் பொங்கலுக்கு மறுநாள் இந்த விழா நடத்தப்படுகிறது.

பிருங்கி என்ற முனிவர் சிவபெருமானை தவிர வேறு யாரையும் வழிபட மாட்டார். சிவபெருமானின் மனைவி பார்வதிதேவியை கூட அவர் வழிபடுவதில்லை. ஒரு முறை பிருங்கி முனிவர், சிவனை வழிபடுவதற்கு கயிலாய மலைக்கு சென்றார். அப்போது ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் சேர்ந்து அமர்ந்து இருந்தனர். உடனே வண்டு உருவம் கொண்ட முனிவர், சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார். இதனைப் பார்த்த பார்வதி தேவிக்கு கோபம் உண்டானது.

உடனடியாக அவர் பிருங்கி முனிவரிடம், "என்னை வழிபடாத உனக்கு, தண்டனை உண்டு. உன் உடலை இயங்கச் செய்யும் என்னுடைய சக்தியை எனக்கே திருப்பி கொடுத்து விடு" என்றார். பிருங்கி முனிவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. உடனடியாக சக்தியை கொடுத்து விட்டார். அதனால் அவரால் நிற்கக்கூட முடியவில்லை. கீழே விழப்போன அவரை சிவபெருமான் கைத்தாங்கலாக பிடித்தார். இதனால் சிவனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் உண்டாகி, அவர்களுக்குள் ஊடல் ஏற்பட்டது. பார்வதி தேவி, சிவபெருமானை பிரிந்து திருவண்ணாமலை ஆலயத்துக்கு வந்து கதவை பூட்டிக் கொண்டார்.

பார்வதிதேவியின் ஊடலை தணிக்க சுந்தரமூர்த்தி நாயன்மாரை, சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அந்த தூது வெற்றி பெறவில்லை. இதனால் சிவபெருமான் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தார். பக்தனுக்காக பார்ப்பதா? இல்லையென்றால் தாலி கட்டிய மனைவிக்காக பார்ப்பதா? என்று யோசித்தார். இருவருமே வேண்டும் என்று தீர்மானித்த அவர் அன்று இரவு தனியாக இருக்கிறார். மறுநாள் தன் பக்தனான பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருள்பாலித்து விட்டு, ஆலயத்துக்கு திரும்பி அன்னையின் கோபத்தை தணிக்கிறார். இதனால் அவர்களது ஊடல் நிறைவுபெறுகிறது.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடக்கிறது. இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பிறகு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் மூன்று முறை மாட வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள்.

அன்று மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது சிவபெருமானிடம் அம்மன் கோபம் கொள்வது போல் காட்சிகள் அமையும். ஊடல் அதிகமானதும் அம்மன் கோபத்துடன் புறப்பட்டு சென்று விடுவார். அவர் கோவில் உள்பக்கம் சென்று தனது சன்னிதி கதவுகளை மூடிக்கொள்வார். இதைத் தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் தனியாக புறப்பட்டு செல்வார். அவர் குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அடுத்த நாள் காலையில் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது ஆகும். ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் கிரிவலம் வருவது உண்டு. அதில் தை மாதம் இந்த கிரிவலமும் ஒன்றாகும்.

அண்ணாமலையார் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்று கிரிவலத்தை மேற்கொள்வார்கள். கிரிவலப் பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள்புரிவார். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார். அப்போது உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் ஊடல் கோபம் தீர்ந்து விடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒரு சேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

திருவூடல் திருவிழாவை பார்ப்பவர்களுக்கு மிகுந்த பலன்கள் கிடைக்கும். குறிப்பாக கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும் என்பார்கள். அதனால்தான் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை' என்ற சொல் உருவானது.

கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இதுபோன்ற சிறப்பான திருவிழா தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இவ்வளவு சீரும் சிறப்புமாக நடப்பது இல்லை. திருவண்ணாமலையில் மட்டுமே இது நடக்கிறது. எனவே பொங்கலுக்கு மறுநாள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கி திருவூடலை கண்டு பலன் பெறுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்