பாவங்கள் போக்கும் காமிகா ஏகாதசி விரதம்

காமிகா ஏகாதசியில் விரதம் விரதம் இருப்பவர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.;

Update:2024-07-31 15:44 IST

விரதங்களில் உயர்ந்தது ஏகாதசி விரதம். சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். இங்கு ஏகாதசி என்பது அமாவாசையிலிருந்து 11-வது நாளையும், பவுர்ணமியிலிருந்து 11-வது நாளையும் குறிக்கும். தமிழ் மாதத்தின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு இரண்டு வீதம் மொத்தம் 24 ஏகாதசி உள்ளது. சில வருடங்களில் மட்டும் 25 ஏகாதசி வரும். இந்த நாட்களில் விரதம் இருப்பதன் மூலம் பகவான் மகாவிஷ்ணுவின் அருளைப் பெறலாம்.

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு விதமான பலனை தரக் கூடியது. சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி விரதம் அதிக சிறப்பு பெறுகிறது. அவ்வகையில், ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு காமிகா ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள், இந்த பிறவியிலும், முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டுக்கான காமிகா ஏகாதசி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று இரவு 07.31 மணிக்கு துவங்கி, இன்று மாலை 06.10 வரை ஏகாதசி திதி உள்ளது.

காமிகா ஏகாதசி அன்று பெருமாளை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. மதிப்புமிக்க தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது. துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்