ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2024-03-31 01:53 GMT

சென்னை,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய நாளாகும்.

இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு வாழ்த்து பாடினர்.

இதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை ஆராதனை ஒளி வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில் பங்குத்தந்தை சந்தியாகு மற்றும் கிறிஸ்தவ மக்கள் திரளாக பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

இதேபோல் நெல்லை டவுன் அடைக்கலமாதா ஆலயம் பாளையங்கோட்டை அந்தோணியார் ஆலயம், புனித மிக்கேல் ஆலயம், புனித அருளப்பர் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி பாலக்கரை பசிலிக்கா ஆலயம், மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், ஜோசப் சர்ச், புத்தூர் பாத்திமா ஆலயம், குணமளிக்கும் மாதா ஆலயம், ஆரோக்கிய மாதா ஆலயம் மற்றும் திருவெறும்பூர், மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி, மணிகண்டம் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள தேவாலயங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

அதேபோல, சென்னை சாந்தோம், தூத்துக்குடி பனிமய மாதா, நாகை வேளாங்கண்ணி மாதா உள்ளிட்ட புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது. இயேசு உயிர்த்தெழுந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு இனிப்புகள் வழங்கினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்