பதவி உயர்வு அளிக்கும் பாதாள செம்பு முருகன்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை, பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது.;
அதற்குள், 8-க்கு 8 அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பாதாளத்தில் (பூமிக்கு அடியில்), செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் 'பாதாள செம்பு முருகன்' என்ற பெயர் ஏற்பட்டது. தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என 2 கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.
பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் மறு அவதாரமாக, திருக்கோவிலூர் சித்தர் கருதப்படுகிறார். போகர் சித்தரையும், அவருடைய சீடர் புலிப்பாணியையும் மானசீக குருவாக போற்றி பூஜித்து வந்தவர் தான் திருக்கோவிலூர் சித்தர். இவர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமலிங்கம்பட்டியில் வசித்து வந்திருக்கிறார். இவர், 1½ அடி உயரத்தில் முருகன் சிலையை உலோகத்தால் வடிவமைத்து பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். நாளடைவில் வழிபாடின்று போன இந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியை சேர்ந்த கந்தமாறன் என்ற மிராசுதாரர், மீண்டும் பூஜைகள் நடைபெற செய்தார்.
பாதாள கருவறையில், முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் வேல் ஏந்தியும் காட்சி தருகிறார். இந்த சிலைக்கு முன்பு, திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலையும் உள்ளது. கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 15 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டதாகும். இதேபோல் முன்மண்டபத்தில் செல்வவிநாயகர், அர்த்த மண்டபத்தில் பரிவார தெய்வமாக காலபைரவர் வீற்றிருக்கின்றனர். கோபுரத்துக்குள்ளேயே 36 அடி உயரத்தில் சிவன் சிலை அமைந்திருப்பது சிறப்பு. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருநீறு (விபூதி) பிரசாதமாக வழங்கப்படுகிறது. நறுமணம் கமழும் இந்த விபூதி பல்வேறு நோய்களை குணமாக்கும் மகத்துவம் வாய்ந்ததாகும். 18 வகையான மூலிகைகளை கொண்டு இங்கு விபூதி தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைவிடம்
திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் ரெட்டியார்சத்திரம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து ஸ்ரீராமபுரம் செல்லும் சாலையில், 3 கிலோமீட்டர் பயணித்தால் ராமலிங்கம்பட்டி போகர்நகரில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலை சென்றடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.
கருங்காலி மாலைகள்
கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். கருங்காலி மாலை களை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும். பஞ்ச பூதங்களின் துணை கிடைக்கும். எதிர்மறை சக்திகள் விலகும். குழந்தை பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் சொத்துகள் சேரும். கல்வி ஞானம் அதிகரிக்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, மன இறுக்கம் விலகி உள்ளுணர்வு மேம்பாடு அடையும். ரத்த அழுத்தம் சீராகும் என்று நம்பப்படுகிறது. இதேபோல் பூஜை செய்யப்பட்ட நெல்லிக்காய் பக்தர்களுக்கு வழங் கப்படுவது குறிப்பிடத்தக்கது.