எங்களை காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்

‘எங்கள் நாட்டில் மீண்டும் ஒரு ரத்தக்களறி ஏற்படாமல் காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா’ என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் நெகிழ்ச்சியோடு கூறினார்.

Update: 2023-07-08 21:22 GMT

சபாநாயகர் பேச்சு

இந்திய பயண முகவர்கள் சங்க மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அதையொட்டி இந்திய பயண முகவர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு நேற்று முன்தினம் வரவேற்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்த்தனா பங்கேற்று பேசினார்.

நம்பிக்கைக்குரிய நண்பன்

அப்போது அவர் கூறியதாவது:- 'இந்தியாவும் இலங்கையும் கலாசார, தேசிய, கொள்கை ரீதியாக மிக மிக நெருங்கிய தொடர்புடைய நாடுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையின் நெருக்கமான, நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா திகழ்கிறது. நாங்கள் பிரச்சினைகளில் இருந்தபோதெல்லாம் இந்தியா உதவியிருக்கிறது. தற்போதுகூட, எங்களுக்கான கடன்களை 12 ஆண்டுகளுக்கு மாற்றியமைத்து கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக கேள்விப்பட்டேன். வரலாற்றில் எந்த நாடும் இந்த அளவு உதவி செய்ததில்லை.

மோடிக்கு நன்றி

நாங்கள் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் சிக்கலில் இருந்தபோது, இந்தியாதான் எங்களைக் காப்பாற்றியது. இல்லாவிட்டால் இலங்கையில் மீண்டும் ஒரு ரத்தக்களறி ஏற்பட்டிருக்கும்.' இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'இந்தியா அளித்த உதவியால்தான் நாங்கள் 6 மாத காலத்துக்கு தாக்குப்பிடிக்க முடிந்தது. அதற்காக இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கிறோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்