பெல்ஜியம் நாட்டில் 5 குழந்தைகளைக் கொன்ற பெண் - 16 ஆண்டுகளுக்குப் பிறகு கருணைக்கொலை
தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவீ லெர்மிட் கோரிக்கை விடுத்திருந்தார்.;
பிரஸ்சல்ஸ்,
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜெனிவீ லெர்மிட்(வயது 58) என்ற பெண், கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது 5 குழந்தைகளை கொலை செய்தார். 3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற அவர், தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.
ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்து, பின்னர் போலீசில் சரண் அடைந்துள்ளார். இதையத்து 5 குழந்தைகளை கொன்ற ஜெனிவீ லெர்மிட்டுக்கு 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவீ லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. இதன்படி ஜெனிவீ லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது வக்கீல் நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "ஜெனிவீ லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே கருணைக்கொலை செய்யப்பட்டார்" என்று தெரிவித்தார்.
பெல்ஜியம் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு 2,966 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2021-ம் ஆண்டை விட 10% அதிகம் என்று கூறப்படுகிறது. புற்றுநோய், உடல்நலம் மற்றும் உளவியல் பாதிப்புகள் காரணமாக பெரும்பாலானோர் கருணைக்கொலைக்கு கோரிக்கை விடுப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.