அமெரிக்க ஜனாதிபதி முன்பு மேலாடையின்றி தோன்றிய திருநங்கைக்கு தடை
கடந்த 10-ம் தேதி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரைட் மாத கொண்டாட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் நடத்தினார்
வாஷிங்டன்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் சவுத் புல்வெளியில் சனிக்கிழமை நடந்த பிரைட் நிகழ்ச்சியில் மேலாடையின்றி சென்ற திருநங்கை வழக்கறிஞருக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.
பிரைட் மாத கொண்டாட்டத்தில் மேலாடையின்றி போஸ் கொடுக்கும் வீடியோவை, ரோஸ் மோன்டோயா என்ற திருநங்கை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனை சந்தித்ததையும், பின்னர் ஜனாதிபதி ஜோ பைடனுடன் கைகுலுக்குவதையும் பார்க்க முடிகிறது. அந்த திருநங்கை வெள்ளை மாளிகையின் முன் தொடர்ச்சியாக அரை நிர்வாண போஸ் கொடுப்பதையும் அந்த வீடியோவில் காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் செவ்வாயன்று, நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், டிரான்ஸ் வக்கீல் ரோஸ் மோன்டோயா உட்பட, "தகாத" நடத்தையில் ஈடுபட்டுள்ளனர், இது "தங்கள் குடும்பங்களைக் கொண்டாட வந்த நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. என கூறி உள்ளார்.
கடந்த 10-ம் தேதி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரைட் மாத கொண்டாட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் நடத்தினார். இந்த நிகழ்வு ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒற்றுமையைக் காட்டுவதாக இருந்தது, அவர்கள் பழமைவாத மாநில சட்டமன்றங்களில் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று வெள்ளை மாளிகை குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.