மத்திய கிழக்கில் போர் பதற்றம் - இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-08-03 09:28 GMT

Image Courtesy : AFP

தெஹ்ரான்,

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தளபதி பாத் ஷுகிர் கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் கோலான் பகுதியில் நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டதால், மத்திய கிழக்கு பகுதிகளில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து கூடுதல் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மத்திய கிழக்கிற்கு விரைந்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் அவசர உதவிக்கு தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்(+972-547520711, +972-543278392) அறிவிக்கப்பட்டுள்ளன.

தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், தூதரகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்