28-வது நாளாக நீடிக்கும் போர்: 10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-11-02 23:44 GMT

Image Courtacy: AFP

காசா,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் ராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என 1,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதோடு பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் அதிகமானோரை ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 28-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் வான் மற்றும் கடல் வழியாக காசா மீது குண்டுகளை வீசி தாக்கி வந்த இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாட்களாக தரைவழியாக காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் போரால் காசா நகரம் சிதைந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 5-வது முறையாக ஏற்பட்டுள்ள இந்த போர் முந்தைய 4 போர்களை விடவும் கொடூரமானதாகவும், மோசமானதாகவும் மாறி வருகிறது.

இந்த நிலையில் காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. குண்டு வீச்சில் குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இஸ்ரேல் ராணுவமோ, அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தளபதி இப்ராஹிம் பியாரியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதலில் இப்ராஹிம் பியாரி உள்பட ஹமாஸ் அமைப்பினர் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியது.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவு ஜபாலியா அகதிகள் முகாம் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர் தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலை கண்டித்து கொலம்பியா, சிலி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலில் இருந்து தங்கள் நாட்டு தூதர்களை திரும்பப் பெற்றன. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் இஸ்ரேலில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலை ஜோர்டான் தீவிரமாக வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் 9 ஆயிரத்து 61 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3,760 குழந்தைகள், 2,326 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 32 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இருதரப்பிலும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்