நேபாளத்தில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வாக்குப்பதிவு

தேர்தல் வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடத்தப்பட்டு, இன்று மாலை 7 மணிக்கு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

Update: 2023-03-09 11:45 GMT

Image Courtesy : ANI

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக வித்யா தேவி பண்டாரி, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் 13-ந்தேதி நிறைவடைகிறது.

இதையடுத்து நேபாளத்தின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுபாஷ் நெம்பாங்கு மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் ராம் சந்திர பவ்டல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் 884 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மதியம் 3 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, இன்று மாலை 7 மணிக்கு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே நேபாள நாட்டில் அரசியல் ஏகாதிபத்திய ஆட்சி அமைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் ராஷ்டிரிய பிரஜதந்திரா கட்சி, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. தங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதே சமயம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராம் சந்திர பவ்டலுக்கு 8 கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்