செவ்வாய் கிரகத்தின் பெல்வா பள்ளத்தை படம் எடுத்து அனுப்பிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்தை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வுசெய்து வருகிறது.

Update: 2023-05-21 08:29 GMT

வாஷிங்டன்,

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 'பெர்சவரன்ஸ்' என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

கடந்த 2021 ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம், 2022 பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் 'ஜெசேரோ பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், இந்த 'ஜெசேரோ பள்ளத்தாக்கு' பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்தது.

இந்த பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு பல அரிய புகைப்படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த படங்களை ஆய்வுசெய்து, கிரகத்தில் நீர்நிலைகள் மற்றும் நுண்ணுயிர்கள் இருந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது 'பெர்சவரன்ஸ்'ரோவர் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பெல்வா பள்ளத்தின் உட்புற பகுதியை பெர்சவரன்ஸ் ரோவர் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

இந்த பள்ளம் தோராயமாக 0.6 மைல் அகலம் (0.9 கிலோமீட்டர் அகலம்) நீளம் கொண்டதாகவும், பல அடுக்குகளாகவும் உள்ளது. தற்போது இந்த பள்ளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்