3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு கத்தாரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
தோகா,
கபோன், செனகல், கத்தார் நாடுகளுக்கான பயணத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கினார். இந்த 3 நாடுகளுக்கு இந்திய துணை ஜனாதிபதி ஒருவரின் முதல் பயணம் இதுவாகும். முதலில் கபோன் நாட்டிற்கு சென்ற அவர் அந்த நாட்டு பிரதமர், அதிபர் உள்பட அந்நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கபோன் நாட்டை தொடர்ந்து மே 2 ஆம் தேதி அவர் செனகல் நாட்டுக்கு சென்றார். செனகல் அதிபர் மேக்கி சால்லுடன் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் கடைசிக் கட்டமாக கத்தார் நாட்டிற்கு சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமரும் உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் அப்துல் அஜிஸ் அல் தானியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று தமது 3 நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு வெங்கையா நாயுடு தனது மனைவியுடன் கத்தாரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.