அமெரிக்க வர்த்தக ரகசியங்களை திருட சதி செய்த சீன உளவுத்துறை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!
விமான நிறுவன ரகசியங்களை திருட சதி செய்த சீன உளவுத்துறை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.;
வாஷிங்டன்,
சீனாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரியாக இருந்த யான்ஜுன் சூ (42) 2003இல் தொடங்கி, சீன அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் துணைப் பிரிவு இயக்குநர் பதவி வகித்தவர். இது சீனாவுக்கான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஆகும்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் அமெரிக்காவில் உள்ள ஜிஇ ஏவியேஷன் விமான நிறுவனத்தின் பிரத்தியேகமான விமான எந்திரத்தில் பயன்படுத்தி வரும் தொழில்நுட்பத்தை திருட தீவிர முயற்சியில் ஈடுபட்டார். உலகில் வேறு எந்த நிறுவனமும் ஜிஇ ஏவியேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியவில்லை. இதற்காக அவர் சீன அரசுக்காக அமெரிக்காவில் உளவு பார்த்தார்.
விமானத் துறையில் முன்னணியில் உள்ள அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள குறிப்பிட்ட நிறுவனங்களை யான்ஜுன் சூ இலக்கு வைத்தார். அவர் அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை வேலைக்கு அமர்த்தினார். சீனாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் விமான துறை சார்ந்த கருத்தரங்கம் வழங்குவதற்காகப் பயணிப்பதாகக் கூறி அந்த பணியாளர்களை அவர் சீனாவுக்கு அழைத்து சென்றுள்ளார். அதற்கான பயணச் செலவுகளை ஈடுகட்ட உதவித்தொகையை வழங்கி வந்துள்ளார்.
சீன அரசின் உளவுத்துறை ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தான் அழைத்து சென்ற பணியாளர்களை ஹோட்டல் அறைகளில் தங்க வைத்து, அவர்களுக்கு தெரியாமல் கணினிகளை ஹேக் செய்ய சீன அரசின் உளவுத்துறையில் உள்ளவர்களுடன் இணைந்து யான்ஜுன் சூ வேலை செய்தார்.
அமெரிக்க ராணுவத் தகவல்களைப் பெறுவதற்கான முயற்சிகள் குறித்தும் வர்த்தக ரீதியிலான விமான நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் குறித்தும் யான்ஜுன் சூ பேசியுள்ளார். இவற்றை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கண்டுபிடித்தனர்.
விமான நிறுவனங்களிடம் இருந்து வர்த்தக ரகசியங்களை திருட சதி செய்த சீன உளவுத்துறை அதிகாரி யான்ஜுன் சூ மீதான வழக்கு விசாரணை அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் உள்ள கோர்ட்டில் நடந்தது. அதில் 'நாடு கடத்தப்படவிருந்த சீன உளவுத்துறை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசு வழக்கறிஞர் கென்னத் பார்க்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க வர்த்தக ரகசியங்களை திருட முயற்சிக்கும் எவருக்கும் நாங்கள் பொறுப்புக் கூறுவோம்.யான்ஜுன் சூ அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை திருட சதி செய்தார். அமெரிக்க உளவுத்துறை (எப் பி ஐ), ஜிஇ ஏவியேஷன் மற்றும் எங்கள் சோதனைக் குழுவின் விடாமுயற்சிக்கு நன்றி" என்று கூறினார்.