பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்கர் 40 நாட்களுக்கு பிறகு மரணம்

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 6 வாரத்திற்கு பிறகு அவரது உடலில் இதயத்தை நிராகரிக்கும் அறிகுறிகள் காட்டத் தொடங்கியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-02 07:33 GMT

நியூயார்க்:

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் ஃபாசெட் (வயது 58). முன்னாள் கடற்படை வீரரான இவரது இதயம் செயல் இழந்த காரணத்தால், மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அன்று இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இதயத்திற்கு பதில், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். மாற்று இதயம் பொருத்தப்பட்டு 40 நாட்களுக்கு பிறகு அவர் இறந்துள்ளார்.

இதுபற்றி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல் மாதம் லாரன்சின் இதயம் ஆரோக்கியமாக இருந்தது. அவரது உடல் நிலை முன்னேறியது. அவர் தனது குடும்பத்தினருடன் நன்றாக பேசினார். ஆனால் 6 வாரங்களுக்கு பிறகு அவரது உடலில் இதயத்தை நிராகரிக்கும் அறிகுறி காட்டத் தொடங்கியது. மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் லாரன்ஸ் உயிரை காப்பாற்ற முடியாத நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி உயிர் பிரிந்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது நபர் லாரன்ஸ் ஆவார். முதல் நபர் டேவிட் பென்னட். இதே மேரிலேண்ட் மருத்துவக் குழுவினர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டேவிட் பென்னட்டுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தினர். அந்த நபர் இரண்டு மாதத்திற்கு பிறகு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்