தைவான் ஜலசந்தியில் அமெரிக்க கப்பல் மீது மோதுவது போல சென்ற சீன கப்பல்

தைவான் ஜலசந்தியில் அமெரிக்க கப்பலை மோதுவது போல சீனாவின் கப்பல் நெருங்கி நின்றது. இது குறித்த வீடியோ வெளியானதால் அங்கு பதற்றம் அதிகரித்தது.

Update: 2023-06-06 07:26 GMT

தைபே,

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் சீனா இன்னும் அதனை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என கூறி வருகிறது. இதனால் தைவானோடு நேரடி வர்த்தக, தூதரக உறவுகளில் ஈடுபடக்கூடாது என மற்ற நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இருந்து வருகின்றன. இதற்கிடையே சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் அதிபர் சாய்-இங்-வென் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்தார். இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

நெருங்கி நின்ற சீன கப்பல்

இதனையடுத்து தைவான் எல்லையில் போர்ப்பயிற்சி, ஏவுகணை சோதனை ஆகியவற்றில் சீனா ஈடுபட்டது. மேலும் தைவானின் வான்பரப்பில் போர் விமானங்களையும் பறக்க விட்டு போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். சுங்-ஹூன் மற்றும் கனடா நாட்டின் எச்.எம்.சி.எஸ். மாண்ட்ரீல் ஆகிய கப்பல்கள் தைவானுக்கும், சீன நிலப்பரப்புக்கும் இடையிலான தைவான் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்தன. அப்போது சீன கப்பல் ஒன்று வேகமாக அமெரிக்க கப்பலை முந்திச்சென்று அதன் முன்பு மோதுவது போல நெருங்கி நின்றது.

பதற்றம் அதிகரிப்பு

இதனால் அமெரிக்க கப்பல் தனது வேகத்தை 10 மடங்காக குறைத்து பின்னர் விலகி சென்றது. ஆனால் கனடா நாட்டின் கப்பல் முன்பு இது போன்ற முயற்சியில் சீனா ஈடுபடவில்லை. இது குறித்த வீடியோவை அமெரிக்க ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் சீன கப்பலால் அமெரிக்க கப்பலின் பாதை துண்டிக்கப்படுவது பதிவாகி உள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச கடல்சார் விதிகளை மீறுவதாக இந்தோ-பசிபிக் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளின் உறவில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்