சீனாவின் மனித உரிமை மீறல்: ஜின்ஜியாங் அறிக்கை பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர்
ஜின்ஜியாங் விவகாரம் பற்றிய ஐ.நா. அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.;
ஜெனிவா,
சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் பல முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் பல லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்று உலகம் முழுவதும் தெரிய வந்தது. ஆனால் இதனை சீனா மறுத்து வந்தது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் (ஓ.ஹச்.சி.ஹச்.ஆர்), சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பகுதியில் அரங்கேறிய கொடுமைகள் பற்றிய அறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டது.
இதனையடுத்து, ஜின்ஜியாங் விவகாரம் பற்றிய ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-
நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளவற்றை படித்து ஐ.நா பொதுச் செயலாளர் கவலை அடைந்தார். ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை சீனா ஏற்கும் என்று கூறினார்.
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், உய்குர் சமூகம் மதிக்கப்பட வேண்டும் என்பதை கடந்த சில காலமாகவே ஐ.நா பொதுச் செயலாளர் கூறி வந்தார். இந்நிலையில், ஜின்ஜியாங் விவகாரம் பற்றி பொதுச்செயலாளர் கூறி வந்த விஷயங்களை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்ததாக அவரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைய அறிக்கை:
ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில், உய்குர்கள் மற்றும் பிற பெரும்பான்மையான முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவது, 2017 இன் பிற்பகுதி முதல் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்செல் பச்செலெட் கடந்த மே மாதம் சீனா சென்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், கொடுமையான சித்திரவதை, தடுப்புக்காவலில் அடைத்து தவறாக நடத்துதல் மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் நம்பகமானவையாக உள்ளன என்றார்.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விரிவான விசாரணை நடத்தி 48 பக்க அறிக்கையை ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட்டது. அதில் உய்குர் முஸ்லிம்களை சீன அரசு சித்ரவதை செய்வது வருவது நிரூபனமாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்செல் பச்செலெட் பணி நிறைவுபெறும் கடைசி நாளில் ஓய்வு பெறுவதற்கு சில மணி நேரம் முன், சீனாவை பகிரங்கமாக குற்றம்சாட்டி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. இந்த இன பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
அவர்களை வைத்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கருத்தடை மாத்திரை, கருத்தடை ஊசிகளும் போடப்படுகின்றன.
முகாம்களில் முஸ்லிம்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சித்ரவதைகளை சீன அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜின்ஜியாங் பகுதி தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நிலைப்பாடு:
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வெளியான நிலையில், உலகம் முழுவதும் 20 நாடுகளைச் சேர்ந்த 60 உய்குர் அமைப்புகளைக் கொண்ட குழு, உய்குர்களுக்கு எதிரான சீனாவின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உடனடி தீர்வு எட்டப்பட்ட வேண்டுமென கோரி வருகின்றன.
இதற்கிடையில், சீன அரசாங்கம் ஐ.நா.வின் விரிவான அறிக்கையை மறுத்துள்ளது.
ஐ.நா.வுக்கான சீன தூதரக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் செயல்படுகின்றனர்.
ஜின்ஜியாங் பகுதியில் தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஐ.நா. அறிக்கையில் சுட்டிக் காட்டப்படவில்லை. அந்தப் பகுதியில் மனித உரிமைகளை நிலைநாட்ட சீன அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவற்றை மறைத்து ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. சீனாவின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.