ஐ.நா. பொது சபை கூட்டம்; செப்டம்பர் 26-ல் பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி, கடைசியாக 2021-ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. பொது சபையின் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றினார்.

Update: 2024-07-16 13:31 GMT

ஐ.நா. சபை,

ஐ.நா. பொது சபையின் 79-வது உயர்மட்ட பொது விவாத கூட்டம் வருகிற செப்டம்பர் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு நடைபெற உள்ளது. இதற்கான தற்காலிக பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை ஐ.நா. சபை வெளியிட்டு உள்ளது.

இதில், வருகிற செப்டம்பர் 26-ந்தேதி நண்பகலில் இந்திய அரசின் தலைவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பிரதமர் மோடி அன்றைய தினம் ஐ.நா. பொது சபையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இது இறுதிப்பட்டியல் அல்ல. பேச்சாளர்கள் அடங்கிய தற்காலிக பட்டியலில், பங்கேற்பாளர்கள், தலைவர்கள், மந்திரிகள் மற்றும் தூதர்கள் ஆகியோரை பற்றிய திருத்தங்கள் இருப்பின் அதுபற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டு புதிதாக வெளியிடப்படும்.

ஐ.நா. பொது சபையின் பாரம்பரிய முறைப்படி செப்டம்பர் 24-ந்தேதி உயர்மட்ட கூட்டத்தில் முதல் நபராக பிரேசில் நாட்டு தலைவர் தொடக்க உரையாற்றுவார். இதனை தொடர்ந்து, தன்னுடைய ஆட்சியின் இறுதி காலத்தில் உள்ள அமெரிக்க அதிபர் பைடன், சர்வதேச தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றுவார்.

வரலாற்று சாதனையாக, இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக கடந்த மாதம் பொறுப்பேற்று கொண்ட பிரதமர் மோடி, கடைசியாக 2021-ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. பொது சபையின் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உலக தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள். இந்த மாநாடானது, தற்போது சிறந்த காலம் ஒன்றை எப்படி உருவாக்குவது மற்றும் பாதுகாப்பான வருங்காலம் ஆகியவை பற்றி ஒரு புதிய சர்வதேச கருத்தொற்றுமையை உருவாக்குவதற்காக உலக தலைவர்களை ஒன்றிணைக்கும் உயர்மட்ட கூட்டம் இதுவாகும்.

இதுபற்றி ஐ.நா. அமைப்பு கூறும்போது, நாம் உயிர் பிழைத்து வாழ்வதற்கு, சிறந்த முறையிலான உலகளாவிய ஒத்துழைப்பு என்பது முக்கியம். ஆனால், நம்பிக்கையற்ற சூழல், இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார உண்மைகளை பிரதிபலிக்காத காலங்கடந்த விசயங்களை பயன்படுத்தி இதனை அடைவது என்பது கடினம் என தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்