உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் - 24 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 24 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

Update: 2023-10-05 21:09 GMT

கோப்புப்படம் 

கீவ்,

உக்ரைன்-ரஷியா போர் கடந்த 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அவை வழங்கும் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது.

ஆனால் சமீப காலமாக உக்ரைனுக்கு வழங்கும் உதவிகள் குறைந்து வருகின்றன. குறிப்பாக உக்ரைனுக்கு அதிக அளவில் உதவிகளை செய்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அங்குள்ள நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

மேலும் எதிர்க்கட்சிகள் இணைந்து அங்கு பணமசோதா நிறைவேற்றுவதை முடக்கின. இதனால் அரசு நிர்வாகமே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. வருகிற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களுள் ஒருவரான விவேக் ராமசாமியும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயத்தில் உக்ரைன் உள்ளது. இதனால் 50 ஐரோப்பிய தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஸ்பெயின் சென்றுள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுகமான தெற்கு ஒடேசா, மைகோலெய்வ், கிரோவோஹ்ராட் போன்ற பகுதிகளில் ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. ஈரானில் தயாரிக்கப்பட்ட 29 டிரோன்களை உக்ரைன் மீது ரஷியா அனுப்பியது. அதில் 24 டிரோன்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்