அமெரிக்காவில் கருப்பின வாலிபரை அடித்துக்கொன்ற போலீசார்; வீடியோ வெளியாகி பரபரப்பு
அமெரிக்காவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கருப்பின வாலிபரை போலீசார் அடித்ததில் உயிரிழந்தார்.;
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் மெம்பிஸ் சேர்ந்த 29 வயதான கருப்பின இளைஞர் டயர் நிக்கோலஸ். சம்பவத்தன்று இவர் காரில் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது போக்குவரத்து சிக்னலில் நின்றார்.அப்போது அவரை காரில் பின்தொடர்ந்து வந்த போலீஸ் அதிகாரிகள் அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி கைது செய்ய முற்பட்டனர். அப்போது நிக்கோலசை 5 போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு பின் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த கொடூர சம்பம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், போக்குவரத்து சிக்னலில் காத்திருந்த நிக்கோலசை போலீஸ் அதிகாரிகள் காரில் இருந்து வெளியே இழுத்து கைது செய்ய முற்படுகின்றனர். அப்போது தான் தவறு செய்யவில்லை, வீட்டுக்குத்தான் செல்கிறேன் என்று கூறி நிக்கோலஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அவரை போலீசார் பலமாக தாக்குகிறார்கள். அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடிக்கிறார்கள். கால்களால் உதைக்கின்றனர். முதுகில் லத்தியால் அடிக்கிறார்கள். நிக்கோலஸ் வலியால் 'அம்மா, அம்மா' என்று கதறுகிறார். பின்னர் அவர் அப்படியே மயங்கிவிடுகிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும் போலீஸ் அதிகாரிகள் அணிந்திருந்த பாடி கேமரா எனப்படும் உடலோடு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதுதான் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட 5 போலீஸ் அதிகாரிகளுமே கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.