இந்திய-போர்ச்சுகல் உறவுகளில் இவைதான் இயங்கு சக்திகள்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

போர்ச்சுகல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு வெளிவிவகார துறை மந்திரி கிராவினோவை நேரில் சந்தித்து பேசினார்.

Update: 2023-11-01 09:28 GMT

லிஸ்பன்,

போர்ச்சுகல் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், அந்நாட்டின் அதிபர் அகஸ்டோ சான்டோஸ் சில்வாவை இன்று காலை சந்தித்து பேசினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, இந்த சந்திப்பில் இருதரப்பு உறவை பற்றிய ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எங்களுடைய விவாதத்தில் இடம் பெற்ற சில விசயங்களை பற்றி, வளர்ச்சி காணும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும்படி கூட்டு பொருளாதார குழுவை நாங்கள் கேட்டு கொள்ள இருக்கிறோம் என கூறினார்.

இதுதவிர, சுகாதாரம், மருந்தகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் மேம்பட நாம் இன்னும் என்னென்ன மேற்கொள்ள முடியும் என்று பார்க்கும்படியும் அவர்களை கேட்டு கொள்ள உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். போர்ச்சுகலில், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தடம் பதித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இதன்பின்னர், அந்நாட்டு வெளிவிவகார துறை மந்திரி ஜோவாவோ கிராவினோவை அவர் நேரில் சந்தித்து பேசினார். இதில், இந்தியா மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கிடையேயான உறவை பற்றிய பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, அவருடன் இணைந்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இரு நாட்டு உறவுகளில், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை ஒரு வலிமையான இயக்கு சக்தியாக உள்ளன என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்