மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம்.. ஒரே வார்த்தையில் ஓட்டலை அலறவிட்ட சுற்றுலா பயணி

ஓட்டலில் சோதனை செய்வதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற முயன்றதால் அவரை கைது செய்ததாக தெரிவித்தார்.

Update: 2023-11-03 09:18 GMT

போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட சுற்றுலாப் பயணி (வட்டமிடப்பட்ட பகுதி)

லிஸ்பன்,

வெளிநாடுகளில் பயணம் செய்யும்போது பலருக்கும் மொழிப்பிரச்சனை ஏற்படுவது வழக்கமானதுதான். அதுவும் அவர்களின் தாய்மொழி வழக்கத்தில் இல்லாத நாடுகளுக்கு சென்றால் கவனமாகவே பேசவேண்டும். கொஞ்சம் வார்த்தையை மாற்றி பேசினாலும் சிக்கலை சந்திக்க நேரிடும். அப்படி ஒரு சிக்கலை சந்தித்திருக்கிறார் அசர்பைஜான் நாட்டு சுற்றுலாப் பயணி.

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். 36 வயது நிரம்பிய அவருக்கு ரஷிய மொழிதான் பேசத் தெரியும். ஓட்டலில் தனக்கான உணவு ஒன்றை வாங்க முயற்சிக்கும்பொழுது அவருக்கு அந்த இடத்தின் மொழியான போர்ச்சுகீஸ் மொழி தெரியாததால் மொழிபெயர்ப்பு செயலியை (ஆப்) பயன்படுத்தியிருக்கிறார்.

அந்த ஓட்டலில் மாதுளை பழச்சாறு ஆர்டர் செய்ய விரும்பியிருக்கிறார். இதற்காக மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தியபோது மாதுளை பழச்சாறுக்குப் பதிலாக, அதன் ஆங்கில வார்த்தையான pomegranate-ஐ தவறாக மொழிபெயர்த்து வழங்க, இறுதியில் grenade (கையெறி குண்டு) என்று ஆர்டர் செய்துவிட்டார்.

அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெயிட்டர், கையெறி குண்டு வைத்து மிரட்டுவதாக நினைத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் விரைந்து வந்து சுற்றுலா பயணியை கைது செய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரிடமோ, அவர் தங்கியிருந்த அறையிலோ எந்த ஒரு ஆயுதமும் இல்லை. எனவே, அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஓட்டல் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓட்டலில் சோதனை செய்வதற்கு முன்பே அங்கிருந்து வெளியேற முயன்றதால் அவரை கைது செய்ததாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்