ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்; வீரர்களுடன் இணைந்த இஸ்ரேல் முன்னாள் பிரதமர்
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வீரர்களுடன் முன்னாள் பிரதமர் இணைந்து கொண்டார்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனிய குழுவினரை தோற்கடிப்போம் என இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக காசா முனை பகுதியருகே ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் போர் முனையில் வீரர்களுடன் ஒன்றாக கைகுலுக்கி கொண்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. பகுதிநேர பணியாக அவர் போரில் பங்கேற்க சென்றுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் கூட்டணி நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்கா தன்னுடைய விமானந்தாங்கி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. போர் கப்பல்கள் அடங்கிய வரிசையானது கிழக்கு மத்திய தரை கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், காசா முனை பகுதியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.