எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பங்கில் 2 நாட்களாக வரிசையில் காத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே,எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பங்கில் 2 நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்தேன் என கூறியுள்ளார்.

Update: 2022-07-16 04:32 GMT



கொழும்பு,



நடப்பு ஆண்டு ஆகஸ்டில் ஆசிய கோப்பை 2022 போட்டிகளை இலங்கை நடத்த உள்ளது. ஆனால், அந்நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையில் சராசரியாக தினசரி 10 சதவீதம் மக்களே எரிபொருள் பெற முடிகிற சூழல் காணப்படுகிறது.

நாடு முழுவதும் மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு பல மாதங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

போராட்டம் முற்றியதில், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் இல்லத்திலும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால் அவதிப்பட்டது பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே வேதனையுடன் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2019ம் ஆண்டு விளையாட தொடங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, எரிபொருள் பற்றாக்குறையால், என்னால் கிரிக்கெட் பயிற்சிக்கு கூட போக முடியவில்லை. 2 நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காரில், நீண்ட வரிசையில் காத்திருந்தேன். அதிர்ஷ்டவசத்தில் எரிபொருள் கிடைத்து விட்டது என கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எரிபொருள் பற்றாக்குறையால் என்னால் சென்று பயிற்சி செய்ய முடியவில்லை. 2 நாட்களுக்கு பின்பு ரூ.10 ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளேன். இது 2ல் இருந்து 3 நாட்களுக்கு வரும் என கூறியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்