இந்தியாவுடன் நம்பிக்கைக்கான உறவு 1950-ம் ஆண்டில் தொடக்கம்; ஆஸ்திரிய அதிபர் புகழாரம்
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் கடுமையான போரை பற்றி நேற்றிரவும், இன்று காலையும் நாங்கள் இருவரும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று ஆஸ்திரிய அதிபர் கூறினார்.
வியன்னா,
ரஷியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், ரஷிய நாட்டுக்கான பயணம் நிறைவடைந்ததும், நேற்று மாலை ஆஸ்திரியாவுக்கு அவர் புறப்பட்டு சென்றார். அவரை ஆஸ்திரிய வெளியுறவு துறை மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பெர்க் முறைப்படி வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமர் நேற்றிரவு அவருக்கு விருந்தளித்து உபசரித்ததுடன், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதன்பின் அந்நாட்டின் வியன்னா நகரில், அதிபர் கார்ல் நெஹாமர் உடன் உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளின் கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசும்போது, நான் இதற்கு முன்பே கூறியிருக்கிறேன். இது போருக்கான நேரம் அல்ல என்று குறிப்பிட்டு பேசினார்.
விவகாரங்களுக்கான ஒரு தீர்வை நாம் போர்க்களத்தில் இருந்து கண்டறிய முடியாது. ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்தியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவில் தீர்வு காண வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்துகிறது. அதற்கு, எந்தவித தேவையான ஆதரவையும் வழங்க, நாங்கள் இருவரும் ஒன்றாக தயாராக இருக்கிறோம் என்றார்.
இதனால், உக்ரைன் போரில் தூதரக பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டிய அவசியம் பற்றி அவர் வலியுறுத்தி உள்ளார். அவரை தொடர்ந்து பேசிய ஆஸ்திரிய அதிபர் நெஹாமர், பிரதமர் மோடி குறிப்பிட்ட விசயங்களை பிரதிபலிக்கும் வகையில் பேசினார்.
அவர் பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையே மிக நல்ல உறவு உள்ளது. 1950-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கைக்கான உறவு தொடங்கியது.
1955-ம் ஆண்டில் ஆஸ்திரியாவுக்கு இந்தியா உதவியது. ஆஸ்திரியா தனிநாடு ஒப்பந்தம் ஏற்படுவதற்காக அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், நேர்மறையான முடிவு ஏற்பட்டது என்று அவர் பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து, உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் கடுமையான போரை பற்றி நேற்றிரவும், இன்று காலையும் நாங்கள் இருவரும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றார்.
ரஷிய அதிபர் புதினுடனான பிரதமர் மோடியின், இருதரப்பு சந்திப்பின்போது, போரால் குழந்தைகள் படுகொலை செய்யப்படும் விவகாரம் பற்றியும் பேசப்பட்டது.
அப்போது, ஒன்றுமறியாத குழந்தைகள் மரணம் அடைவது மனம் நெருடும் விசயம் என்பதுடன், உயிரிழப்புகள் ஏற்படுவது மனிதகுலத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரையும் புண்படுத்தும் விசயமும் ஆகும் என்று பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து நெஹாமர் கூறும்போது, சர்வதேச உறவுகளுக்கான அரசியல் சூழலில், வளர்ச்சிக்கான விசயங்களே இரு நாடுகளையும் இணைத்துள்ளன என்று கூறியுள்ளார். கடந்த 41 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் பிரதமர் மோடியாவார்.