உலகில் கொரோனா பாதிப்பே இல்லாத ஒரே நாடு... காரணம் என்ன?
உலக அளவில் கொரோனா பாதிப்புகளே இல்லாத ஒரே நாடு என்று இன்றளவும் துர்க்மேனிஸ்தான் இருப்பதற்கான காரணங்களை பற்றி பார்ப்போம்.;
அஸ்காபாத்,
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக பரவி லட்சக்கணக்கானோரை பலி கொண்டு உள்ளது. இதில், வல்லரசு நாடுகளும் தப்பவில்லை. 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் 8 நாடுகளே கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாத பூஜ்ய பாதிப்பு எண்ணிக்கை கொண்ட நாடுகளாக இருந்தன.
அவற்றில் தெற்கு பசிபிக் சமுத்திர பகுதியில் உள்ள தீவுகளே அடங்கியிருந்தன. ஆனால், அந்த பட்டியலில் தற்போது மீதமிருக்கும் நாடு எது என பார்ப்போம்.
2022-ம் ஆண்டு ஆகஸ்டில் வடகொரியா கொரோனா பாதிப்புக்கு ஆளான தகவலை முதன்முறையாக அறிவித்தது. இதனை தொடர்ந்து, மீதமுள்ள கொரோனா பாதிப்பற்ற ஒரே நாடாக துர்க்மெனிஸ்தான் இன்றளவும் நீடித்து வருகிறது. இது எப்படி சாத்தியம்?
துர்க்மெனிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாதது என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அந்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய ஆசிய பகுதியில் அமைந்துள்ள துர்க்மெனிஸ்தான் நாடானது, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. மேற்கே கேஸ்பியன் கடல் எல்லையாக அமைந்துள்ளது.
1991-ம் ஆண்டு வாக்கில் சுதந்திர நாடாக ஆனது. எனினும், கொரோனா பாதிப்புகள் பரவ தொடங்கிய பின்பு அதுபற்றி உலக சுகாதார அமைப்புக்கு அந்நாடு அளித்த தரவுகள் உண்மையாக இருக்காது என நம்பப்படுகிறது.
இதுபற்றி லண்டன் பேராசிரியர் மார்ட்டின் மெக்கீ கூறும்போது, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ சுகாதார புள்ளி விவரங்கள் நம்ப கூடியவையாக இல்லை என கூறுகிறார்.
2020-ம் ஆண்டில் இருந்து, கொரோனா என்ற வார்த்தை பயன்பாட்டையே அந்நாடு தடை செய்தது. அதோடு, நாட்டுக்குள் நோய் நுழைந்து விடாத வகையில், கட்டுப்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது என சுகாதார அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்நாட்டில் 60 லட்சம் மக்கள் வசிக்க கூடிய சூழலில், பெருந்தொற்றில் இருந்து தப்புவது என்பது கடினம் வாய்ந்த விசயம். ஏனெனில், எடுத்துக்காட்டாக அண்டை நாடான ஈரானை எடுத்து கொண்டால் 70 லட்சம் பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அது, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு அறிகுறிகளுடன் வந்தவர்களுக்கு பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதியானபோதும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வ முறையில் வெளியிடப்படுவது இல்லை என கூறப்படுகிறது.
வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கூறும்போது, துர்க்மெனிஸ்தான் சுகாதார துறையில் பணியாற்றுவோர், கொரோனா அல்லது கொரோனா வைரசின் பாதிப்பு போன்ற வார்த்தைகளை தவிர்க்கின்றனர்.
கொரோனா பாதிப்பு என்பதற்கு பதிலாக, அவர்கள் வியாதி என்ற பெயரையும், நிம்மோனியா அல்லது இதய செயலிழப்பு போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர் என கூறுகின்றனர்.
அந்நாட்டில், தலைநகர் அஸ்காபாத் நகரில் துருக்கிக்கான தூதர் கெமால் உக்குன் என்பவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன. அதனால், அவரது மனைவி சொந்த நாடான துருக்கிக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்து செல்ல முயற்சித்து உள்ளார்.
அதற்காக துருக்கி மருத்துவர்களுக்கு மார்பு பகுதியில் எடுத்த எக்ஸ்ரே அறிக்கையை அனுப்பி வைத்து உள்ளார். ஆனால், உக்குன்னின் மரணத்திற்கு பின்னரே அவர் துருக்கிக்கு செல்வதற்கான அனுமதியே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது.
சி.என்.என். பத்திரிகையில் வெளியான செய்தியில், ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குனர் ரேச்சல் டென்பர் கூறிய தகவலில், அந்த பகுதியில் மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என பாருங்கள்.
அது துர்க்மெனிஸ்தான் நாட்டிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என பாருங்கள். அந்நாட்டுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் இடையேயான பெரிய வேறுபாடு என்பது அந்த அதிபரின் மனப்பான்மையே ஆகும்.
அவரது வழக்கத்திற்கு மாறான குணநலன்களே அந்நாடு சுகாதாரத்துடன் உள்ளது போன்ற தோற்றம் ஏற்படுத்த அடிப்படையாக அமைந்து உள்ளது. அரசு தொலைக்காட்சியில், அவர் உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்குவது போன்றோ அல்லது சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவது போன்றோ தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.