சர்வதேச போட்டியில் புர்கா வேடமிட்டு பெண்களோடு செஸ் விளையாடிய ஆண்

கென்யாவில் சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் பெண்களுடன் விளையாட, ஆண் ஒருவர் புர்கா அணிந்து வந்து உள்ளார்.

Update: 2023-04-15 11:20 GMT

நைரோபி,

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் வருடாந்திர செஸ் போட்டி நடைபெறுவது வழக்கம். கென்ய ஓபன் என்ற பெயரிலான இந்த போட்டியில் 22 நாடுகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இவர்களில் ஸ்டான்லி ஓமண்டி (வயது 25) என்பவரும் ஒருவர். ஆணான இவர், பெண்களுக்கான செஸ் போட்டியில் விளையாட தனது பெயரை மில்லிசென்ட் ஆவாவுர் என்ற பெயரில் பதிவு செய்து உள்ளார்.

போட்டியின்போது, உடல் முழுவதும் மறைக்கும்படி புர்கா அணிந்து கொண்டதுடன், அடையாளம் தெரியாமல் இருக்க கண்ணாடி ஒன்றையும் போட்டு கொண்டார்.

போட்டி நடத்தும் அமைப்பாளர்கள் அவரை, பாரம்பரிய இஸ்லாமிய பெண்ணாக இருப்பார்போலும் என நினைத்து கொண்டனர். பெயர் பதிவு செய்தபோதும், சக நபர்களிடம் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக காணப்பட்டார்.

இதன்பின் போட்டியில் விளையாடி தொடர்ந்து வெற்றிகளை குவித்து உள்ளார். எனினும், போட்டி நடத்திய பணியாளர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னரே, அவரது சூழ்ச்சி விளையாட்டு தெரிய வந்து உள்ளது.

தினமும் புர்கா அணிந்து வந்ததும், தொடர்ந்து வெற்றி பெற்றதும் போட்டி நடத்துபவர்களுக்கு சந்தேகம் எழுப்பி உள்ளது. இதனால், முதலில் தயங்கியபோதும், 4-வது சுற்று போட்டி முடிந்ததும், அந்த நபரை விசாரிப்பது என முடிவானது.

இதனால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று அடையாள அட்டை போன்றவற்றை காட்ட சொல்லி கேட்டு உள்ளனர். அப்போது, அவர் பல்கலைக்கழக மாணவர் என்றும் நிதி நெருக்கடியால் இப்படி செயல்பட்டது பற்றி அவர்களிடம் கூறி உண்மையை ஒப்பு கொண்டு உள்ளார்.

அவர் சர்வதேச அளவிலான புள்ளிகளை பெற்ற போதும், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது நிலுவையில் உள்ளது. அவர் பெற்ற புள்ளிகள் அனைத்தும் எதிர் தரப்பினருக்கு வழங்கப்பட்டு விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்