சூடானில் மக்களாட்சி அமைய ஆதரவு- ராணுவ தளபதி உறுதி
ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
கார்டூம்,
ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மக்களாட்சியை கொண்டு வர கோரி ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த வாரம் இந்த மோதல் தீவிரம் அடைந்து உள்நாட்டு போராக மாறியது. எனவே இரு தரப்பினரும் துப்பாக்கிகள், வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு பரஸ்பரம் தாக்கினர். இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 413 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
சூடானில் நடந்து வரும் இந்த உள்நாட்டு போர் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. எனவே போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை வலியுறுத்தியது. அதன்பேரில் ரம்ஜானை முன்னிட்டு 3 நாட்கள் போரை நிறுத்தி வைக்க இரு தரப்பு ராணுவ தளபதிகளும் சம்மதம் தெரிவித்தனர்.இந்த நிலையில், `சூடானில் பொதுமக்கள் தலைமையிலான மக்களாட்சி அரசாங்கம் உருவாக ராணுவம் ஆதரவு அளிக்கும்' என அந்த நாட்டின் ராணுவ தளபதி அப்தெல் பட்டா புர்ஹான் நேற்று முன்தினம் உறுதியளித்தார். இவரது இந்த அறிவிப்பு போரை நிறுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.