அமெரிக்காவில் வினோதம்... வேட்டைக்கு சென்ற இடத்தில் எஜமானரை சுட்டு கொன்ற செல்ல நாய்

அமெரிக்காவில் வேட்டைக்கு சென்ற இடத்தில் எஜமானரை செல்ல நாய் சுட்டு கொன்ற வினோத சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-01-25 08:06 GMT

கோப்பு படம்



வாஷிங்டன்,


அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட அவர்கள் தங்களது பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம். அந்நாட்டில், துப்பாக்கி சூடு சம்பவங்கள் சமீப காலங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

பிறந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரிடமும், துப்பாக்கி கலாசராம் அதிகரித்து உள்ளது. இதனால், துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு விதிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க செல்ல பிராணியுடன் வேட்டைக்கு சென்ற இடத்தில் தனது வளர்ப்பு நாயால் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட அவலம் நடந்து உள்ளது.

இதுபற்றி சம்னர் கவுன்டி ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், வாகனம் ஒன்றில் தனது செல்ல நாயுடன், அதன் உரிமையாளர் காட்டுக்கு வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.

அவர் முன்பக்கம் இருக்கையில் அமர்ந்து உள்ளார். பின்பகுதியில் சீட்டில் இருந்த துப்பாக்கியை, உடன் வந்த வளர்ப்பு நாய் திடீரென மிதித்து உள்ளது. இதில், துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து முன்பக்கம் இருந்த எஜமானரை சுட்டுள்ளது.

அவரது முதுகு பக்கத்தில் துப்பாக்கி குண்டு துளைத்து உள்ளது. இதில், மயங்கி சரிந்த அவர் உயிரிழந்து உள்ளார். இது தெரியாமல் அந்த வளர்ப்பு நாய் அவரை சுற்றி, சுற்றி வந்துள்ளது. இதுபற்றி கன்சாஸ் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், 2021-ம் ஆண்டில் தற்செயலாக துப்பாக்கி சுட்டதில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

பொதுவாக செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் தங்களது எஜமானரை பல்வேறு தருணங்களில் காப்பாற்றிய சம்பங்களே அதிகம் காணப்படுகின்றன. அவர்களின் குழந்தைகளையும் பிற விலங்குகள் மற்றும் ஆபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளன. ஆனால், வனவிலங்கு வேட்டைக்கு சென்ற இடத்தில், அந்த நபரே இரையான சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்