இலங்கையில் விரைவில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் - எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை

கோத்தபய ராஜபக்சேவை விரட்டி அடித்தது போல் மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-09-26 22:22 GMT

கோப்புப்படம்

கொழும்பு,

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். பிறகு நாட்டை விட்டு தப்பிச்சென்று பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், அதேபோன்ற மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று இடதுசாரி எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திஸ்சநாயகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே 1 லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். வர்த்தகம் சீர்குலைந்து விட்டது. போலீசாரும், பொதுச்சேவை பணியாளர்களும் கடன் சுமையிலும், பட்டினியாகவும் கிடக்கிறார்கள். அரசு ஊழியர்கள், கடன் தவணையை செலுத்த முடியாமல் இருக்கிறார்கள்.

எனவே, எந்த நேரத்திலும் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும். கோத்தபய ராஜபக்சேவை விரட்டி அடித்தது போன்ற போராட் டமாக அது இருக்கும்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மக்கள் தீர்ப்பை பெற்று அதிபர் ஆகவில்லை. அவரை தேர்வு செய்த 134 எம்.பி.க்களும் மக்கள் தீர்ப்பை இழந்து விட்டனர். ரணில் விக்ரமசிங்கேவை மக்கள் நிராகரித்து, அவருக்கு எதிராக தெருவில் இறங்க தொடங்கி விட்டனர்.

போலீஸ் தடுப்புகளை போட்டும், உயர் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவித்தும் மக்கள் போராட்டத்தை தடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, இலங்கையில் இருந்து மணிக்கு 32 பேர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதாக தேசிய ஜஸ்ட் சொசைட்டி இயக்கத்தின் தலைவர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

பொருளாதார சிக்கல் காரணமாக, கடந்த 8 மாதங்களில் இலங்கையில் இருந்து 500-க்கு மேற்பட்ட டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். நூற்றுக்கணக்கான என்ஜினீயர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகளும் வெளியேறி விட்டனர். ஒரு மணி நேரத்தில் சராசரியாக 32 பேர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்கின்றனர்.

இலங்கையில், பல்கலைக்கழக கல்விக்கான போதிய வசதிகள் இல்லை. எனவே, பெற்றோர் கடன் பெற்றாவது தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்க அழைத்துச் செல்கிறார்கள். இதனால், நாட்டின் எதிர்கால வளங்களை இழந்து வருகிறோம். ஒவ்வொருவரும் இந்த பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்