இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு தேர்தல்களை ஒத்திவைக்க வாக்கெடுப்பு.. அதிபரின் கட்சி பரிந்துரை

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சி தெரிவித்துள்ளது.

Update: 2024-05-28 16:10 GMT

கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 340 உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 16-க்கு இடைப்பட்ட தேதியில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒத்திவைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், தேவையான பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள அதிபர் மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரை செய்துள்ளது.

இந்த திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார முன்வைத்தார். தேவைப்பட்டால் இதை அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அதன்மூலம் பொது வாக்கெடுப்புக்கு வழிவகை செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் சர்வதேச நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளோம், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம். நமது குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். நிர்வாக சீர்திருத்தங்கள் ஆட்சியை நெறிப்படுத்தியுள்ளன, கல்வி முறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் உதவி செய்த பிற நாடுகளுடன் அரசாங்கம் உடன்படிக்கைகளை எட்டியுள்ளது. மேலும் இந்த முயற்சியை வெற்றிகரமாக செய்துமுடிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்றும் பாலித ரங்கே பண்டார கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB)கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பொது வாக்கெடுப்பு மூலம் அதை நீட்டிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி வலியுறுத்தி உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிபர் பயப்படுவதையே இது காட்டுகிறது, அவர் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார் என விமுக்தி பெரமுனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்