இலங்கை அதிபர் அதிகாரங்கள் பறிப்பு மசோதா தயார் - இன்று மந்திரிசபை ஒப்புதல்

இலங்கை அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் அரசியல் சாசன திருத்த மசோதா, இன்று மந்திரிசபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

Update: 2022-06-06 01:25 GMT

கொழும்பு,

இலங்கையில் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தபோது அவருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா-20 ஏ நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசன திருத்தம் 19-ஏ செல்லாமல் போனது.

தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அந்த நாட்டில், இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக கடந்த 12-ந் தேதி ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார்.

அதைத் தொடர்ந்து இலங்கையில் அதிபரின் மட்டற்ற அதிகாரங்களைப் பறித்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தம் கொண்டு வரப்படும் என்பது முக்கிய அறிவிப்பாக வெளியானது.

இந்த நிலையில், 21-வது அரசியல் சாசன திருத்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மந்திரிசபை கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) அந்த மசோதாவை வைத்து, ஒப்புதல் பெறப்படுகிறது.

இதுபற்றி அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சே மேலும் கூறியதாவது:-

இந்த அரசியல் சாசன திருத்தம் தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் கடந்த வாரம் விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் ஆகியோரும் உடன் இருந்து கலந்து கொண்டனர்.

மந்திரிசபையின் ஒப்புதல் பெற்று வரைவு மசோதா, அரசிதழில் வெளியிடப்படும். அடுத்த வாரம் இது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அரசியல் சாசன திருத்த மசோதா, நாடாளுமன்றத்துக்கு அதிபரை கட்டுப்பட்டவர் ஆக்கும், தேசிய கவுன்சிலும் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டதாகும், இதே போன்று 15 கமிட்டிகளும், மேற்பார்வை கமிட்டியும் கூட நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட வேண்டியதாகி விடும்.

Tags:    

மேலும் செய்திகள்