வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; அமெரிக்கா, தென்கொரியா கடும் கண்டனம்

வடகொரியா ஒரு வாரத்தில் 4-வது முறையாக நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Update: 2022-10-01 16:41 GMT

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்று வரையில் 3 முறை மொத்தம் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

ஜப்பானுக்கு இடையே கடலில் விழுந்தன

இந்த பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி தென்கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும் 30-50 கி.மீ. உயரத்தில் சுமார் 350-400 கி.மீ. தூரம் வரை பறந்தன. பின்னர் அந்த இரு ஏவுகணைகளும் கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கும் இடையிலான கடலில் விழுந்தன" என கூறப்பட்டுள்ளது.

தென்கொரியா கடும் கோபம்

வடகொரியா இப்படி தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதிப்பது அந்த நாடு விரைவில் அணு குண்டு சோதனை நடத்துவதற்கான சமிஞ்சை என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை வழக்கத்துக்கு மாறாக தென்கொரியாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.

வடகொரியா இப்படி தனது அடாவடி போக்கை தொடர்ந்தால் அந்த நாடு மிகவும் பயங்கரமான பதிலடியை எதிர்கொள்ளும் என தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் எச்சரித்துள்ளார்.

உறுதியான பதிலடி

இதுபற்றி அவர் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து சர்வதேச அளவில் எதிர்ப்புகள் இருந்தும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மீதான மோகத்தை கைவிடவில்லை. அணு ஆயுதங்களின் வளர்ச்சி வடகொரிய மக்களின் வாழ்க்கையை மேலும் வேதனையில் ஆழ்த்தும்.

வடகொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சித்தால், அந்த நாடு, தென்கொரியா-அமெரிக்க கூட்டணி மற்றும் நமது ராணுவத்தின் உறுதியான, பெரும் பதிலடியை எதிர்கொள்ளும்" என்றார்.

ஜப்பான் ராணுவ மந்திரி

அதேபோல் அமெரிக்கா மற்றும் ஜப்பானும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜப்பானின் துணை ராணுவ மந்திரி டோஷிரோ இனோ, "இந்த ஏவுகணை சோதனை முற்றிலும் ஏற்க முடியாதது. வடகொரியா ஒரு வாரத்தில் 4 சுற்று ஏவுகணை சோதனைகள் நடத்தியது முன்னோடியில்லாதது.

இது கொரிய தீபகற்பத்திலும் சர்வதேச சமூகத்திலும் அமைதி மற்றும் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும்" என சாடினார்.

அமெரிக்கா கண்டனம்

அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் சட்ட விரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் நிலையற்ற தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு முற்பட்டால் அமெரிக்காவிடம் இருந்து பெரிய அளவிலான பதிலடியை சந்திக்கும்" என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்