ஈராக்கில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதல் - 6 பேர் பலி

ஈராக்கில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகினர்.;

Update: 2022-05-22 20:19 GMT

கோப்புப்படம்

பாக்தாத்,

ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்திஷ்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஷ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர். ஒய்.பி.ஜி என அழைக்கப்படும் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படை குர்திஷ் மக்களை பாதுகாக்கிறது. ஆனால் துருக்கி அரசு குர்து போராளிகளின் இந்த பாதுகாப்பு படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

‌குறிப்பாக ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தரை வழியாகவும் வான் வழியாகவும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈராக்கின் கிழக்கு பகுதியில் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா நகரில் குர்து இன போராளிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்ததில் பொதுமக்களில் 3 பேர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். எனினும் இந்த தாக்குதல் குறித்து துருக்கி ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்