சீனாவில் அதிர்ச்சி: புயல் வீசி வீட்டின் ஜன்னலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு 3 பேர் பலி

சூறாவளி போன்ற கடுமையான காற்று வீசியதில், அதே கட்டிடத்தில் இருந்த மற்றொரு 60 வயது பெண்ணும், ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

Update: 2024-04-07 10:43 GMT

பீஜிங்,

சீனாவின் தெற்கே ஜியாங்சி மாகாணத்தில் கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து கடுமையான புயல் வீசி வருகிறது. இதில் சிக்கி, 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இதனால், 5,400 வீடுகள் சேதமடைந்து உள்ளன. 3.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயலில் இருந்து பாதுகாக்கும் வகையில், 1,600 குடியிருப்புவாசிகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டது. இது மூன்றாம் நிலை எச்சரிக்கையாகும். 2013-ம் ஆண்டில் இருந்து விடப்பட்ட மிக கடுமையான அளவு இதுவாகும். கனமழை மற்றும் கடுமையான இடி ஆகியவற்றால், நான்சங்க் நகரில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதில், 60 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் அவருடைய 11 வயது பேரன் என இருவரும் குடியிருப்பில் இருந்தபோது, படுக்கை விரிப்போடு சேர்ந்து ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டனர். இதில், அவர்கள் 2 பேரும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சூறாவளி போன்ற கடுமையான காற்று வீசியதில், அதே கட்டிடத்தில் இருந்த மற்றொரு 60 வயது பெண்ணும் இதேபோன்று, ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

புயல் காற்றால், சில பெரிய கட்டிடங்களில் இருந்த ஏ.சி. இயந்திரங்கள் உடைந்து விழுந்தன. காற்று வீசியதில், 2 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

சீனாவில், கடந்த ஆண்டு சாதனை அளவாக வெப்பநிலை பதிவாகி இருந்தது. வெப்ப அலைகளும் முன்னெப்போதும் கணிக்க முடியாத அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தியது. இதேபோன்று, கடந்த ஆண்டு குளிரும் சீனாவை வாட்டி எடுத்தது. கடந்த ஆண்டின் ஜனவரி 22-ந்தேதி ஹீலாங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கே ஜிந்தாவோ நகரில் மைனஸ் 53 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்