2 நாள் பயணமாக சீனா சென்றார் ரஷிய அதிபர் புதின்

2 நாள் பயணமாக ரஷிய அதிபர் புதின் சீனாவுக்கு சென்றுள்ளார்.

Update: 2023-10-17 23:49 GMT

பீஜிங்,

உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் தி பெல்ட் அண்ட் ரோடு திட்டமானது கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் சாலை மற்றும் கடல் வழியாக மற்ற நாடுகளை தன்னுடன் இணைப்பதே சீனாவின் நோக்கம் ஆகும்.

மேலும் இந்த திட்டத்தினை ஏற்றுக்கொண்ட நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா ஏற்படுத்தி கொடுக்கிறது. அதன்படி சாலை அமைத்தல், கட்டுமானம், துறைமுக சீரமைப்பு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கடுமையான எதிர்ப்பு

அத்துடன் முடிவடையாமல் கல்வி, சுகாதாரம், ரெயில்வே போன்ற துறைகளில் சீனா கோடிக்கணக்கில் முதலீட்டையும் செய்கின்றது. ஆனால் உலக பொருளாதாரத்தை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.

இருப்பினும் சீனாவின் அழுத்தத்தால் இதுவரை சுமார் 160 நாடுகள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்ட 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனா ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

பேச்சுவார்த்தை

இந்த மாநாட்டில் எத்தியோப்பியா, ஹங்கேரி, சிலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் தற்போது ரஷிய அதிபர் புதினும் அங்கு சென்றுள்ளார். 2 நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இரு நாடுகளிடையே எரிசக்தி, உயர் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்