எகிப்தில் கடலில் குளித்த ரஷிய பயணி சுறாமீன் தாக்கி உயிரிழப்பு
சுறாமீன் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கிழிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கெய்ரோ,
எகிப்து நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹுர்காடா சுற்றுலாவுக்கு பெயர்போன நகரம் ஆகும். இங்கு ரஷிய நாட்டை சேர்ந்த சிலர் சுற்றுலா சென்றிருந்தனர். அங்குள்ள செங்கடலில் நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்தபோது திடீரென சுறா மீன் வந்து அவர்களை தாக்கியது.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கிழிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சுறாமீன் அவர்களை தாக்குவது போன்ற வீடியோ அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தநிலையில் எகிப்தில் உள்ள ரஷிய தூதரகம், `ரஷியா சுற்றுலா பயணிகள் ஹுர்காடாவின் கடலில் குளிக்கும்போது எகிப்து அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்' என தனது சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.