ரஷிய அதிபர் புதினுக்கு உடல்நல குறைவு...? பரவிய தகவலால் பரபரப்பு

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உடல்நல குறைவு என பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update:2023-10-25 08:09 IST

மாஸ்கோ,

ரஷிய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார். இவருடைய ஆட்சியில், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுக்கு எதிராக ராணுவ படையெடுப்பு என்ற பெயரில் போர் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதனால், எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், சமீபத்தில் அதிபர் புதினுக்கு தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளிவந்தன. அவர் ஞாயிற்று கிழமை அன்று உடல்நல குறைவுக்கு ஆளானதுடன், தரையில் கிடக்கிறார் என்றும் சுற்றுமுற்றும் பார்த்தபடி காணப்பட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இதுபற்றி அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் பற்றி மற்றொரு புரளி எழுந்துள்ளது. அவர் நன்றாகவே இருக்கிறார் என கூறினார்.

கடந்த காலங்களிலும் இதுபோன்ற புரளிகள் வெளிவந்தன. புதினுக்கு பார்கின்சன் என்ற மறதி நோய் ஏற்பட்டு உள்ளது உள்பட பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டன. எனினும், அவை அனைத்தும் உண்மையல்ல என்றும் அவை வெறும் வதந்திகள் என்றும் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிபர் புதின் கடந்த வாரம், சீனாவில் நடந்த சர்வதேச ஒத்துழைப்புக்கான சாலை மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அவருடைய மனைவி கலந்து கொண்டனர்.

அதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய புதின், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை பற்றியும் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்