"உக்ரைனில் ரஷியா மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது" - கமலா ஹாரிஸ்

உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.

Update: 2023-02-19 07:20 GMT

Image Courtesy : ANI

பெர்லின்,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் சுமார் ஓராண்டு காலமாக நீடித்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் பெரும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள முனிச் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், உக்ரைன் மீதான போரில் ரஷியா மிக மோசமான போர் குற்றங்களை செய்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது. கொலை, பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்துதல், மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட சித்ரவதைகளை ரஷிய ராணுவம் பொதுமக்கள் மீது நிகழ்த்தியுள்ளது.

உக்ரனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரஷியாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் தங்கள் குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.

போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஷிய ராணுவத்தின் அத்துமீறல்களை நாம் கவனித்து வருகிறோம். இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள், ரஷிய ராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்பதை நிரூபிக்கின்றது."

இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்