துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்து விட்டது. அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

Update: 2023-02-09 17:07 GMT

பேரழிவு நிலநடுக்கம்

துருக்கியின் தென்கிழக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த 6-ந்தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த பேரழிவு நிலநடுக்கமும், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளும் இரு நாட்டையும் உலுக்கி எடுத்தன.

விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் தரைமட்டமாகி விட்டன. அவற்றை வாழ்விடங்களாக கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் கான்கிரீட் குவியல்களாக மாறிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரை விட்டனர். இந்த பேரழிவு நிலநடுக்கம் துருக்கியில் மட்டுமே 10 மாகாணங்களை புரட்டிப்போட்டு இருக்கிறது. அங்கு திரும்பிய இடமெல்லாம் மரண ஓலங்களும், பிணக்குவியல்களும், கண்ணீரை வரவழைக்கும் காட்சிகளுமாக உள்ளன.

1.10 லட்சம் பேர்

மலைபோல குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளை நீக்கி, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்கவும், பிணங்களை அகற்றவும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் பேரிடர் மீட்பு படைகளையும், நவீன எந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மருந்து பொருட்களையும், மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் அனுப்பி வைத்து உள்ளன. அந்தவகையில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மீட்பு படையினர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் வாகனங்கள் களத்தில் உள்ளதாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கட்டிட இடிபாடுகளில் இருந்து தோண்ட ேதாண்ட பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இரு நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் துருக்கியில் மட்டுமே சுமார் 13 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதைப்போல இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உயிருடன் மீட்கப்பட்ட தந்தை-மகள்

பேரிடர் ஏற்பட்டு 4-வது நாளான நேற்றும் இடிபாடுகளில் இருந்து சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இது மீட்புக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் அன்டாக்கியா நகரில் நேற்று ஹாசல் குனர் என்ற இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டார். 2 மணி நேரத்துக்குப்பின் அவரது தந்தை சோனரையும் மீட்புக்குழுவினர் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரும் உயிர் பதற்றத்துடனும், சோர்வுடனும் காணப்பட்ட அவரிடம், மகள் மீட்கப்பட்ட தகவலை வீரர்கள் தெரிவித்தனர். அப்போது அவர், 'உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்' என கண்ணீர் மல்க முணுமுணுத்தார். இதைப்போல டியார்பகிர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கட்டிட இடிபாடுகளில் இருந்து நேற்று அதிகாலையில் உயிருடன் மீட்கப்பட்டார். அதேநேரம் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை அவர் இந்த பேரழிவுக்கு பறிகொடுத்து விட்டார்.

உறவுகள் கண்ணீர்

இதற்கிடையே நிலநடுக்கத்தில் தங்கள் வீட்டையும், உறவுகளையும் பறிகொடுத்த பலரும் அந்த கட்டிட இடிபாடுகளையே சுற்றி சுற்றி வருகின்றனர். மீட்புக்குழுவினர் தங்கள் இடங்களுக்கு வருவதற்கு தாமதமாவதால் தாங்களாகவே அந்த கான்கிரீட் குவியல்களை அகற்றி உறவுகளை மீட்க முயற்சிக்கின்றனர். ஆனால் கடினமான கான்கிரீட் கட்டைகளை அகற்ற முடியாததால் உறவுகளை மீட்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.

இது குறித்து செரப் அர்ஸான் என்ற 45 வயது பெண் கூறுகையில், 'எனது தாய் மற்றும் சகோதரர் உள்பட ஏராளமானோர் இன்னும் இடிபாடுகளுக்குள்ளே சிக்கியுள்ளனர். இந்த கனமான கான்கிரீட் கட்டைகளை அகற்ற நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. நவீன எந்திரங்கள் இருந்தால்தான் அவற்றை அகற்ற முடியும்' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

வாட்டும் குளிர்

இது ஒருபுறம் இருக்க, நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் இரவில் கடும் குளிர் வாட்டுகிறது. இதனால் வீடுகளையும், உறவுகளையும் இழந்தவர்களின் துயரம் மேலும் அதிகரித்து வருகிறது. குளிரில் இருந்து தப்பிக்க போர்வைகளை மூடிக்கொண்டும், தீ மூட்டி குளிர் காய்ந்தவாறும் உறவுகள் சிக்கியிருக்கும் இடிபாடுகளையே வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். சிலர் நிலநடுக்கம் விட்டுவைத்த அண்டை வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் மங்கி வருவதாக நிபுணர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர். எனவே மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. துருக்கியை போல சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்படுத்தி இருக்கும் சோகம் மிகவும் அதிகமாக உள்ளது. உள்நாட்டு போரால் ஏற்கனவே சீரழிந்துள்ள சிரியாவில் நிலநடுக்கத்தின் பாதிப்புகளும் பெருத்த சேதத்தை நிகழ்த்தி இருக்கிறது.

சர்வதேச நாடுகளின் உதவியுடன் அங்கும் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்