ரஷியா-ஜப்பான் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து
ரஷியா-ஜப்பான் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
விளாடிவோஸ்டாக் நகரில் இருந்து 940 கி.மீ தொலைவில் உள்ள ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நானோ துறைமுகத்திற்கு வாரந்தோறும் கப்பல் போக்குவரத்து சேவை நடந்து வந்தது. இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் இருநாடுகள் இடையேயான உறவு பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த கப்பல் போக்குவரத்து சேவை 2020-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் இந்த கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரஷியா அரசு அனுமதி அளித்தது.
அரசு அனுமதிக்கு பிறகு தென்கொரியா நாட்டை சேர்ந்த சொகுசு கப்பல் தன் சேவையை ரஷியாவில் தொடங்கியது. 200 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் 43 பயணிகளுடன் ரஷியாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் தென்கொரியாவில் உள்ள டொங்கே துறைமுக நகரத்தில் நின்றுவிட்டு பின்னர் ஜப்பான் நாட்டிற்கு புறப்படும்.