இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை
இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் இந்திய வம்சாவளி தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கொழும்பு போய்ச் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பெற்றுக்கொண்டார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:-
இலங்கை மலையக தமிழர்கள் சிலர், இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்து விட்டனர். வேறு சிலர் இணையவில்லை. அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழர் பிரச்சினை
அவர்களை எப்படி இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். அந்த சமயத்தில், மலையக தமிழர்களின் பிரச்சினைகளும் படிப்படியாக தீர்க்கப்படும்.
கடந்த 1964-ம் ஆண்டு, சிறிமா பண்டாரநாயகா-லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மலையக தமிழர்கள் பலர் இந்தியாவுக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு செல்லாமல் இலங்கையிலேயே தங்கிவிட்டனர்.
சொந்த நிலம்
மலையக தமிழர்கள், வீடு கட்டிக்கொள்வதை இலங்கை அரசு ஊக்குவித்து வருகிறது. அவர்களுக்கு நிலம் வழங்குகிறது. மற்ற குழுக்களை போல் அவர்களும் சொந்த நிலத்தில் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறோம்.
மலையக தமிழர்களின் குழந்தைகள், படித்து முடிந்த பிறகு அந்த பகுதியை விட்டு வெளியேறுவதால், மலையக பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலையக தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அவர் பேசினார்.