குவாட் உச்சி மாநாடு: டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்.

Update: 2022-05-22 23:50 GMT

Image Courtesy: ANI

டோக்கியோ,

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள், 'குவாட்' என்னும் நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கிற 2-வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (23-ந் தேதி) தொடங்குகிறது. நாளை 24-ந் தேதி முடிகிறது.

இந்த மாநாடு, இந்தோ-பசிபிக் பிராந்திய விஷயங்கள், பரஸ்பர ஆர்வம் உள்ள உலகளாவிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்குகிறது.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அழைத்துள்ளார். பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோரும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். தூதரக அதிகாரிகள் உள்பட பலர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

'குவாட்' உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிற பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை, கல்வி உள்ளிட்ட துறைகளில் நீண்ட கால ஒத்துழைப்பு பற்றி அவர்கள் பேசுகிறார்கள். உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிற உக்ரைன் போர் தொடர்பாகவும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்