ஆசியா, ஆப்பிரிக்காவில் பயங்கரவாத பரவலில் பாகிஸ்தானின் பங்கு; பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல்

பயங்கரவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று லண்டனை அடிப்படையாக கொண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

Update: 2024-09-25 12:02 GMT

ஜெனீவா,

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கு ஒன்று நடந்தது. இதில், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று, பயங்கரவாத ஒழிப்பு, கொடிய தீவிரவாதம் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் அமைதிக்கான மனித உரிமைக்கான சவால்கள் ஆகியவற்றை பற்றி பேசினர்.

இந்நிகழ்ச்சியில், லண்டனை அடிப்படையாக கொண்ட பத்திரிகையாளர் முகமது ஆரிப் ஆஜகியா பேசும்போது, ஆசிய நாடுகளில் பயங்கரவாதம் பரவுவதற்காக பாகிஸ்தான் மேற்கொள்ளும் தந்திரங்களை பற்றி பேசினார். பயங்கரவாதத்திற்கான நாற்றங்கால் பாகிஸ்தான் என கூறிய அவர், உலகளாவிய பயங்கரவாதம் பாகிஸ்தான் ராணுவ உத்தரவின் கீழ் பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்றார்.

அல்-கொய்தா தோற்றம் பற்றி அவர் குறிப்பிடும்போது, தீவிரவாத போக்குடனான இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஒன்றிணைப்பதில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. முக்கிய பொறுப்பு வகிக்கிறது என உறுதியுடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் பென்டகன் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் ஒசாமா பின்லேடன் மற்றும் அபு பராஜ் அல்-லிப்பி மற்றும் அபு ஜுபைடா ஆகியோரை நாம் கண்டறிந்தது எந்த இடம்? அல்-கொய்தாவின் முக்கிய பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டனர்.

ஆனால், பாகிஸ்தானை நம்முடைய நட்பு நாடாக நாம் உருவாக்கி கொண்டோம். அது நம்முடைய தவறு. பயங்கரவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார்.

அவர் தொடர்ந்து, மனித உரிமை பாதுகாவலர்கள் பிற நாடுகளில் தஞ்சமடைந்த பின்னரும் எல்லை கடந்து சென்று, பாகிஸ்தானின் ராணுவம் அவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது என்றார்.

அகமது வகாஸ் கொராயா என்பவருக்கு நடந்த விசயங்களை இதற்கு எடுத்துக்காட்டாக சுட்டி காட்டியிருக்கிறார். அவரை லண்டனில் இருந்து ரோட்டர்டாம் சென்று கொல்வதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் சென்றிருக்கிறார். இதுபற்றிய தகவலை 2 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்து போலீசை தொடர்பு கொண்டு டச்சு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஏனெனில், பாகிஸ்தானின் ராணுவத்தின் உண்மையை பற்றி கொராயா பேசினார் என்று முகமது ஆரிப் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், கொராயாவின் வீட்டை அந்த நபர் சுற்றி வந்து கண்காணித்திருக்கிறார். ஆனால், பாதுகாப்பான இடத்திற்கு அவரை போலீசார் முன்பே கொண்டு சென்று விட்டனர்.

அந்நபரை கைது செய்த பின்னர் நடந்த விசாரணையில், கொராயாவை கொலை செய்வதற்கு பெரிய அளவில் ஐ.எஸ்.ஐ. அமைப்பு பணம் கொடுக்க முன்வந்தது பற்றிய தனிப்பட்ட உரையாடல் விவரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்