இந்த ஆண்டு உலக பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும் - ஐஎம்எப் தலைவர் எச்சரிக்கை

3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்த நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-01-02 11:21 GMT

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு கிறிஸ்டலினா அளித்த பேட்டியில் கூறியதாவது,

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனாவில் பொருளாதாரம் வளர்ச்சி அடுத்தடுத்து குறைந்துள்ளதால் கடந்த ஆண்டை விட 2023-ம் ஆண்டு கடினமாக இருக்கும்.

உலக பொருளாதாரத்தில் 3-ல் 1 பங்கு மந்தநிலையை சந்திக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பொருளாதார மந்த நிலையில் இல்லாத நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்கள் பொருளாதார மந்த நிலையில் இருப்பதாக உணர்வார்கள்.

40 ஆண்டுகளில் முதல் முறையாக, 2022-ம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி உலக வளர்ச்சி விகிதத்தை விட குறைவாகவோ அல்லது அந்த அளவிலோ இருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக பொருளாதாரத்தை நிலைத்தன்மையுடன் வைத்திருப்பதே இந்த அமைப்பின் நோக்கம். பொருளாதார பிரச்சினைகள் எழுவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அளிப்பது சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பணியாக பார்க்கப்படுகிறது.

3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்த நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்