ஒன்றரை மணிநேரம்... 11 ஆயிரம் பேரை இருளில் அலற விட்ட பாம்பு

அமெரிக்காவில் இரவு வேளையில் ஒரு பாம்பு செய்த வேலையால், ஆயிரக்கணக்கானோர் மின்சார வசதியின்றி ஒன்றரை மணிநேரம் வரை தவித்தனர்.

Update: 2024-08-17 12:15 GMT

கோப்பு படம்

விர்ஜீனியா,

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இரவு வேளையில் ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகளுக்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்களை இருளில் ஆழ்த்திய சம்பவம் நடந்துள்ளது. இதில் கில்ன் கிரீக், சென்டிரல் நியூபோர்ட் நியூஸ் மற்றும் கிறிஸ்டோபர் நியூபோர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் இதன் பாதிப்பு உணரப்பட்டது.

இதற்கான காரணம் யாரென விசாரித்தபோது, அது ஒரு பாம்பு செய்த வேலை என தெரிய வந்துள்ளது. இதன்படி, சம்பவத்தன்று இரவு 9.15 மணியளவில் இருந்து 10.30 மணி வரை மின்சாரம் இல்லாமல் 11 ஆயிரத்திற்கும் கூடுதலான பகுதிவாழ் மக்கள் இருட்டில் தவித்தனர்.

அதிக மின்னழுத்தம் உள்ள பகுதி வழியே ஊர்ந்து சென்ற பாம்பு, மின்மாற்றியுடன் தொடர்பு ஏற்பட்டதும், சங்கிலி தொடர்போல் அடுத்தடுத்து இந்த பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் வரை அவர்கள் மின்சார வசதியின்றி தவித்தனர். இதன்பின்பு, இரவு 10.30 மணியளவில் நிலைமை சீர் செய்யப்பட்டு முழு அளவில் மின் விநியோகம் மீண்டும் கிடைக்க தொடங்கியது. எனினும், இது எந்த வகை பாம்பு என தெரியவில்லை.

இதற்கு முன் விர்ஜீனியாவில் இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என கூறப்படுகிறது. எனினும், நாஷ்வில்லே பகுதியருகே, டென்னஸ்சி மாகாணத்தில் பிராங்ளின் பகுதியில் அமைந்த ஹென்பெக் துணை மின் நிலையத்தில் கடந்த மே மாதத்தில், கிரே ரேட் வகையை சேர்ந்த சில பாம்புகள் புகுந்தன. அவை மின்சாதனங்களுக்குள் புகுந்ததில் மின்கசிவு ஏற்பட்டு பரவலாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்