சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்முவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
வாஷிங்டன்,
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதங்கள் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்துவிடம் நேரடியாக அளிக்கப்பட்டன.
அமெரிக்காவில் உள்ள இந்தியா ஹவுஸில் இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அரசின் பிரதிநிதியாக மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணைச் செயலர் பிரையன் பி மெக்கியோன் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்த கடிதங்களை இந்திய தூதரிடம் வழங்கினார்.
அப்போது பிரையன் பி மெக்கியோன் பேசுகையில்:-
இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், நம் மக்கள் ஏங்கிக்கிடந்து அரும்பாடுபட்டு பெற்ற ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இருநாடுகளும் நினைவுபடுத்துகிறோம்.
1947 முதல் இந்தியாவுடனான இருதரப்பு உறவில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. பிரதம மந்திரி நேருவுக்கு ஜனாதிபதி ட்ரூமன் தனது செய்தியில், இந்த மாபெரும் புதிய தேசத்தின் மக்கள் அமெரிக்காவை நிலையான நண்பராகக் காண்பார்கள் என்று கூறினார்.
கடந்த காலத்தைப் போலவே எதிர்காலத்திலும் எங்கள் நட்பு நெருக்கமான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பில் வெளிப்படுத்தப்படும் என்று நான் ஆவலுடன் நம்புகிறேன். இந்திய வரலாற்றில் முக்கியமான நாளை மட்டும் கொண்டாடாமல், நமது உறவுமுறையை ஆதரிக்கும் ஜனநாயக விழுமியங்களையும் கொண்டாடுகிறோம்.
இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பில் இணைய இந்தியாவின் முடிவை அமெரிக்கா வரவேற்கிறது.
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.