கமலா ஹாரிஸ் தென்கொரிய பயணத்தை நிறைவு செய்தவுடன் இன்று வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென்கொரிய பயணத்தை நிறைவு செய்தவுடன் வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளை ஏவியது.

Update: 2022-09-29 16:55 GMT

சியோல்,

வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 25-ந் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை நேற்று பரிசோதனை செய்தது.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று அதிகாலை சியோல் சென்றடைந்தார்.

கமலா ஹாரிஸ் இன்று வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளை பிரிக்கும் எல்லை பகுதிகளை பார்வையிட்டார்.அதன்பின், வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் உடன் கமலா ஹாரிஸ் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், "வடகொரியாவின் ஏவுகணை சோதனை நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.

வட கொரியாவின் மிருகத்தனமான சர்வாதிகாரம், பரவலான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதத் திட்டம் ஆகியன அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலானவை.அமெரிக்காவும் தென்கொரியாவும் அணுஆயுதங்களற்ற வடகொரியாவை விரும்புகின்றன" என்றார்.

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் தென் கொரியாவை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களுக்குள் வட கொரியா இன்று மீண்டும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதனால் கொரிய வளைகுடாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்