புகுஷிமா அருகே கடல் நீரில் கதிரியக்கம் இல்லை - ஜப்பான் விளக்கம்

புகுஷிமா அணு உலை அருகே கடல்நீரில் எந்தவித கதிரியக்கமும் கண்டறியப்படவில்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

Update: 2023-08-27 17:34 GMT

புகுஷிமா,

கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட கடல் நீர், கதிரியக்க கழிவு நீராக மாறியது.

அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது. இதற்காக அந்த கதிரியக்க நீர் சுத்திகரிக்கப்பட்டு பேரல்களில் சேமித்து வைக்கப்பட்டது. ஆனால், ஜப்பானின் இந்த முடிவுக்கு மீனவர்கள் மற்றும் சீன அரசு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எனினும், நீரை வெளியேற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஜப்பான் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி முதல் பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து ஜப்பானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்தது. புகுஷிமா அணு உலையை சுற்றியுள்ள கடல்நீரில் கதிரியக்க அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சீன சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சுத்திகரிக்கப்பட்ட நீரை பசிபிக் கடலில் வெளியேற்றிய பிறகு கடல் நீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில், புகுஷிமா அணு உலைக்கு அருகே கடல்நீரில் எந்தவித கதிரியக்கமும் கண்டறியப்படவில்லை என்று ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்