இந்தியாவில் எந்த பாகுபாடும் இல்லை: முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு மோடி பதில்

வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.

Update: 2023-06-23 05:48 GMT

@narendramodi

வாஷிங்டன்

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நாளை அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு சார்பில் விருந்து அளிக்க உள்ளார்கள். மேலும் நாளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் இரண்டு பெண் எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். ரஷிதா தலைப் மற்றும் இல்ஹான் உமர் ஆகிய இரண்டு அமெரிக்க பெண் எம்.பி.க்களும் பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி பிரதமர் மோடியின் உரையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்க எம்.பி. ரஷிதா தலைப் டுவிட்டரில் இதுகுறித்து கூறி இருப்பதாவது:- "மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவது, முஸ்லிம்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைப்பது, பத்திரிகையாளர்களை தணிக்கை செய்வது போன்ற செயல்களில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ள மோடிக்கு நமது நாட்டின் தலைநகரில் பேச வாய்ப்பு வழங்கி இருப்பது வெட்கக்கேடானது; அவரது நாடாளுமன்ற கூட்ட உரையை நான் புறக்கணிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க எம்.பி இல்ஹான் உமர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சிறுபான்மை மதத்தினரை அடக்கி ஒடுக்குகிறது, வன்முறையில் ஈடுபடும் இந்து தேசியவாதக் குழுக்களைத் தூண்டி விடுகிறது, ஊடகவியலாளர்கள்/மனித உரிமை ஆர்வலர்களை குறிவைத்து தாக்குகிறது. எனவே பிரதமர் மோடியின் நாடாளுமன்ற கூட்ட உரையின் நான் பங்கேற்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். இன்னொரு டுவீட்டில், பிரதமர் மோடியின் அடக்குமுறை மற்றும் வன்முறை குறித்து விவாதிக்க மனித உரிமை குழுக்களுடன் நான் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவேன்" என்று இல்ஹான் உமர் கூறியுள்ளார்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மினிசோடா மாகாணத்தில் இருந்து 2019ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இல்ஹான் உமர். இல்ஹான் உமர் எம்.பி. மீது அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு இந்துபோபியா இருப்பதாக (இந்துக்களுக்கு எதிரான மனநிலை இருப்பதாக) குற்றம்சாட்டி வருகின்றன.

ஜனநாயக கட்சி எம்.பி.யான இல்ஹான் உமர், கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிராக இந்தியாவில் அத்துமீறல் நடந்ததாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், மதச்சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் கொண்டு வந்தார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று வந்தார். இந்தியாவிற்கு எதிரான மனநிலை உடையவர் என்றும் முஸ்லிம் அமைப்பினரின் கவனத்தை பெறும் மனநிலை உடையவர் என்றும் குற்றச்சாட்டு இல்ஹான் உமர் மீது வைக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆதரவு மனநிலை உடையவர் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அதனால் தான் இல்ஹான் உமர் பிரதமர் மோடியின் உரையை எதிர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முஸ்லிம் சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிரிந்து செல்லும் அபாயம் உள்ளது. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் எழுப்ப வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"பிரதமர் மோடியை ஜனாதிபதி சந்தித்தால், பெரும்பான்மையான இந்து இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது குறிப்பிடத் தக்கது என்பது உண்மை என்று நான் நினைக்கிறேன்.

"எனக்கு நன்கு தெரிந்த பிரதமர் மோடியுடன் நான் உரையாடியிருந்தால், எனது வாதத்தின் ஒரு பகுதி என்னவென்றால், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. ," என்று கூறினார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.

முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து இந்தியா என்ன செய்யப்போகிறது என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி:-

நீங்கள் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் உணர்விலும், ரத்தத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது. எங்கள் சுவாசத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது.

எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயகமே உள்ளது. ஜனநாயகத்திற்காக நாங்கள் வாழும்போது பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மனித உரிமைகளும், மனிதத்திற்கான மதிப்பும் இல்லையென்றால் ஜனநாயகம் அங்கு இருக்க முடியாது. அனைத்து சிறுபான்மையினருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து வளங்களும், வசதிகளும் மத, சாதி, இடம் போன்ற எந்த பேதமுமின்றி எளிதாக கிடைக்கிறது. இவ்வாறு அவர் பதிலளித்திருக்கிறார்.

இந்தியாவில் சிறுபான்மையினர் அடக்குமுறைக்கு ஆளாவதாக கூறி, அமெரிக்காவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மோடியின் நாடாளுமன்ற கூட்டமர்வு உரையை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த கேள்வியும் பதிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

2014-ம் வருடம் பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை மோடி எந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்