இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய இலங்கை புதிய பிரதமரின் தந்தை - வரலாற்று தகவல்!

அவர் 1942இல் இந்தியாவுக்கு வந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.

Update: 2022-07-22 15:42 GMT

கொழும்பு,

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனா இன்று பதவியேற்றார். அவருக்கு இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தினேஷ் குணவர்தனா இதற்கு முன்பு வெளியுறவு மற்றும் கல்வித்துறை மந்திரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

அவரது தந்தையும் மறைந்த தலைவருமான "டான் பிலிப் ரூபசிங்க குணவர்தனா" இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு வகித்தவர் என்ற செய்தி தற்போது பரவலாக பேசப்படுகிறது.

பிலிப் குணவர்தனா 1901ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இலங்கையில் தனது உயர்கல்வியை முடிக்காமலேயே, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பதற்காக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். பின் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து லண்டன் சென்றார்.

லண்டனில், சுதந்திரப் போராட்ட வீரர்களான ஜோமோ கென்யாட்டா மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரைச் சந்தித்தார். மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பான இந்திய லீக்கில், கிருஷ்ண மேனன் மற்றும் நேருவுடன் இணைந்து பணியாற்றினார்.

இந்தியாவை சேர்ந்த ஜவஹர்லால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் கிருஷ்ண மேனன் போன்ற உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் மற்றும் கென்யாவின் ஜோமோ கெனிட்டா, மெக்சிகோவின் ஜோஸ் வாஸ்கோன்செலோஸ் மற்றும் பலருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பிலிப் குணவர்தனவுக்கு கிடைத்தது.

1942 இல், அவர் இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். இருப்பினும், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துவதற்கான உத்வேகத்தை அளித்தார் மற்றும் அதை மிகவும் புதுமையான முறையில் செய்தார். பல்நோக்கு கூட்டுறவு சங்க அமைப்பை நிறுவி அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

குருசாமி என்ற பெயரால் அழைக்கப்பட்ட பிலிப் குணவர்தனா, குசுமாவை இந்தியாவில் சந்தித்து அவரது மனைவியாக்கி கொண்டார். அவர்களின் மூத்த மகன் இந்திகா இந்தியாவில் பிறந்தார்.

இலங்கையில் இருந்தபோது அவர் 1935 இல் முதல் இடதுசாரி அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியை தொடங்கினார். அவர் 1943 இல் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்தைக் காண கடுமையாக பாடுபட்டார்.

கடந்த மார்ச் மாதத்தில், பிலிப் குணவர்த்தனாவின் 50வது நினைவு தினத்தை இலங்கை அரசு நினைவு கூர்ந்தது. அவரது பெயர் இலங்கை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.

புகழ்மிக்க தலைவரின் மகனான தினேஷ் குணவர்தனா இலங்கை பிரதமராக பொறுப்பேற்றாலும், நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்களின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்